மாணவியை அடித்தபோது கண் பாதித்து பார்வை போனது- ஆசிரியை சஸ்பெண்ட்

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளியில் படித்து வரும் மாணவியை ஆசிரியை அடித்தபோது அவரது வளையல் கண்ணில் பட்டு மாணவிக்கு பார்வை பறி போய் விட்டது. இதையடுத்து அந்த ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தனது மகளுக்கு கண் போய் விட்டதே, இனி அவளது வாழ்க்கை என்னாகுமோ என்று அந்த சிறுமியின் தாயார் கதறி அழுகிறார்.

சென்னை ஓட்டேரி கிருஷ்ணதாஸ் ரோடு 4-வது தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி எழிலரசி. வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்துகிறார். இவர்களது மகள்கள் இளவரசி (10), மதுமிதா (8). அங்குள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் படித்து வருகிறார்கள்.

கடந்த மாதம் 14-ந்தேதி ஆசிரியை ரேணுகா பரமேஸ்வரி சிறுமி மதுமிதாவை பிரம்பால் கையில் அடித்தார். அப்போது அவரது கை வளையல் உடைந்து சிறுமியின் வலது கண்ணை தாக்கியது. இதையடுத்து கண்ணில் இருந்து ரத்தம் கொட்டியது.

உடனடியாக சிறுமியை எழும்பூர் கண் மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்று சிகிச்சை அளித்தனர். ஆனால் கண்ணில் இருந்த கண்ணாடி சிதறல் கருவிழியில் பாதிப்பு ஏற்படுத்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக அறுவைச் சிகிச்சை மூலம் கண்ணாடிச் சிதறை எடுத்து விட்டனர்.

இந்த நிலையில், சிறுமிக்கு ஆகும் மருத்துவ செலவை ஆசிரியை ரேணுகா தருவதாக உறுதி அளித்தார். இதனால் சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்யவில்லை.

ஆனால் சிறுமி டிஸ்சார்ஜ் ஆனதும் பணம் தர மறுத்து விட்டாராம் ஆசிரியை. இதையடுத்து எழிலரசி, தனது சகோதரியுடன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்து விட்டார்.

புகாரை விசாரித்த ஓட்டேரி போலீஸார் ரேணுகாவைக் கைது செய்தனர். தற்போது ஆசிரியை ரேணுகா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் உத்தரவின் பேரில் ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து எழிலரசி கூறுகையில்,

நான் கஷ்டப்பட்டு 2 மகள்களையும் படிக்க வைத்தேன். கடந்த மாதம் 14-ந்தேதி பள்ளியில் ஆசிரியை அடித்ததில் மதுமிதா கண்ணில் காயம் ஏற்பட்டது. பஞ்சாயத்து பேசி மகள் சிகிச்சை செலவுக்கு ரூ.25 ஆயிரம் தருவதாகவும், தனியார் மருத்துவமனையில் சேர்த்து நல்ல சிகிச்சை அளிப்பதாகவும் தெரிவித்தனர். சொன்னபடி அவர்கள் நடந்து கொள்ளவில்லை.

இதற்கிடையே எனது இன்னொரு மகளையும் பள்ளியில் இருந்து துரத்திவிட்டனர். அவள் படிப்பு பாதியில் நிற்கிறது. எனது மகளின் கண்ணில் ஆபரேஷன் செய்த டாக்டர் அவளுக்கு கண்பார்வை வந்தாலும் வரும், வராமலும் போகும் என கூறுகிறார். இது எங்களுக்கு அதிர்ச்சியை தருகிறது. என் மகள் வாழ்க்கை இருண்டு விடுமோ என்று பயமாக இருக்கிறது.

எனவே அரசு எனக்கு உதவி செய்ய வேண்டும். என் மகளை தனியார் மருத்துவமனையில் சேர்த்து கண்பார்வை கிடைக்க செய்ய வேண்டும். இன்னொரு மகள் இளவரசியை மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும்.

எனது மகள் ஒரு கண் பார்வை இழந்துவிட்டால் அவளை யார் ஏற்றுக் கொள்வார்கள் என்றார் எழிலரசி.

Comments